ॐ
✦
T E M P L E    H E R I T A G E

தலவரலாறு

✦
TEMPLE HISTORY

ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் ஆன்மிகப் பயணத்தின் வரலாறு இங்கே காணலாம்.

◈
LANGUAGE Choose language
OUR HERITAGE

ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயம்

தலவரலாறு – முதலாவது பாகம்

மருதம், குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலங்களுள் பாலை தவிர்ந்த ஏனைய நிலங்களைக் கொண்டதாக விளங்குகின்றது ஈழத்திருநாட்டின் கிழக்கு மாகாணத் தலைநகராகப் போற்றப்படும் மட்டக்களப்பு மாவட்டம். “குன்றுதோறாடும் குமரன்” என்று போற்றப்படும் முருகப்பெருமான் குறிஞ்சிநிலக் கடவுள் என்றே அறியப்படுகிறார். எனினும் தென்னிந்தியாவிலும் இலங்கையின் மட்டக்களப்பிலும் திருச்செந்தூர் முருகன் என்ற நாமத்துடன் நெய்தல் நிலத்திலே கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

எமது ஆலயத்தின் வரலாற்றை அறியும் முன் அதன் ஸ்தாபகரைப் பற்றியும் அவர் ஆலயம் தொடர்பாகத் திருவாய் மலர்ந்தருளிய விடயங்களையும் அறிதல் அவசியமாகும்.

ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயம்

மட்டக்களப்பு நகரின் கல்லடி உப்போடை என்னும் இடத்தில் கந்தையா சின்முத்து தம்பதியினருக்கு 1924-07-13 அன்று புத்திரனாய் அவதரித்தார் கணபதிப்பிள்ளை என்ற பூர்வாசிரம நாமம் கொண்ட சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி.

இவர் சந்நியாசம் பூணுவதற்கு வாய்ப்பளித்த தெய்வநெறிக் கழக ஸ்தாபகர் சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்களது பெயரில் மட்டக்களப்பு பொற்கொல்லர் வீதியில் சிவானந்தர் ஆச்சிரமம் ஒன்றை அமைத்து ஆன்மிக சமூகப் பணிகளையாற்றி வரும்வேளை அவரது சேவைகளைப் பரவலாக்கும் நோக்குடன் கல்லடிக் கடற்கரையோரமாகக் காணியைப் பெற்று அவரது நேரடிக் குருவான சிதானந்த சரஸ்வதி அவர்களின் பெயரில் சிதனந்த தபோவனம் ஒன்றை அமைத்து அக்காணியில் தென்னைமரமுட்பட பல்வேறு பலன்தருமரங்களை நட்டுப் சிறப்பாகப் பேணியதுடன் சமூக, சமய, ஆன்மிகப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

சிதனந்த தபோவனம்

இந்தவேளையில் ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயம் உருவான கதையை அவர் கூறியவாறே கூறுதல் பொருத்தமானதாகும்.

“1965ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மஹாசிவராத்திரிக்கு முதல்நாள் இரவு எனது சிவானந்த ஆச்சிரமத்தில் படுத்திருந்தேன். அன்றிரவு கனவில் தபோவனம் தோன்றியது. தபோவனத்தில் உள்ளது ஒரேயொரு பனைமரம் மட்டம்தான். அந்தப் பனைமரத்தடியில் ஓர் காவியுடை தரித்த சுவாமிகள் உட்கார்ந்திருந்தார்கள்.”

நான் அவரை அணுகி இங்கு ஏன் இருக்கிறீர்கள், எதற்காக இந்த இடத்துக்கு வந்தீர்கள், இப்போ எங்கு போகிறீர்கள் என்றெல்லாம் கேட்டேன். எனது கேள்விகளையெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தார். பின்பு இவர் தளதளத்த குரலில், இனிமையான தொனியில் விடைபகர்ந்தார்.

கடலை நோக்கிக் கையை நீட்டிக் காட்டி, ‘சுவாமி! அதோ தெரிகின்ற திருச்செந்தூரில்தான் நான் இருக்கிறேன். நான் வழக்கமாக இவ்வழியால் கதிர்காமத்துக்குப் போவதுண்டு. அவ்வாறே இப்போதும் கதிர்காமம் போகத்தான் வந்தேன். எக்காலமும் போன்று இன்றும் இந்தப் பனைமரத்தடியில் ஓய்வுபெற்றுக் கொண்டிருக்கிறேன். யாராவது இவ்விடத்தில் ஒரு சிறு கொட்டிலாவது கட்டிவிட்டால் இங்கும் சிலநாட்கள் தங்கிப்போகலாம். உனக்கு முடிந்தால் அதைச் செய்துகொடு’ என்றார்கள்.

அவ்வளவுதான் நான் கனவுநிலை மாறி, நனவு நிலைக்கு வந்துவிட்டேன். ஆனாலும் இந்நிகழ்ச்சி எனக்கு நன்றாக நினைவிலிருந்தது. படுக்கையிலிருந்தபடியே சிந்திக்கத் தொடங்கிவிட்டேன்.

எனது தந்தையாரும் இன்னும் சிலரும் பலமுறை சொன்ன ஒரு விடயமும் எனது நினைவுக்கு வந்தது. அதாவது ‘முருகன் இரவு கதிர்காமம் போகிறார். மயிலின் தோகை இழுபட ஒளிமயமாகப் போவதை நாங்கள் பார்த்தோம்.’

ஆகவே, எனக்கு ஓர் உறுதி தோன்றியது. முருகன்தான் இன்று எனக்கும் காட்சிதந்துள்ளார். இன்று சைவசமயத்தவர்களுக்கெல்லாம் மிகவும் முக்கியமான மஹா சிவராத்திரிதினம். முருகன் வேண்டிக்கொண்டபடி அவ்விடத்தில் ஓர் கோவில் அமைக்க வேண்டும். அதை இன்றே செய்துவிட வேண்டும் என்ற உறுதியும் பூண்டுவிட்டேன்.

கோவில் அமைப்பதென்பது நினைத்த உடன் முடிக்கக்கூடிய காரியமா? ஒருவேல் செய்து வைப்பதென்றாலும் சிலநாட்களாகும். என்ன செய்வதென்று எனக்கே ஒன்றும் தோன்றவில்லை. ஆனாலும், இறுதியில் ஒரு முடிவுவந்தது.

காலையில் எழுந்து ஆச்சிரமச் சுற்றாடலில் கிடந்த கருங்கற்களில் ஒரு நல்லகல்லைத் தேர்ந்தெடுத்தேன். உளி, சுத்தியல் முதலிய ஆயுதங்களைக் கொண்டு கல்லைப் புரட்டிப் புரட்டி ஓர் பிள்ளையாருடைய வடிவத்துக்கு உடைத்தேன்.

வேலை முடிந்ததும், கடைக்குச் சென்று கற்பூரம், ஊதுபத்தி, அபிஷேகச் சாமான் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்தேன். பூமரங்களிலிருந்து பூக்களும் பறித்தெடுத்தேன். ஆச்சிரமத்திலிருந்த சீமெந்திலும் அரைப் பக்கட் அளவு எடுத்தேன்.

இவைகளை எல்லாம் எனது சைக்கிள் கரியரில் கட்டிக்கொண்டு காலை 9 மணியளவில் தபோவனத்துக்குப் போய்விட்டேன். அது தபோவனத்தின் ஆரம்பகாலம். வேறுயாருமில்லை. ஒருதுண்டுக் கல்லுக்கூட அங்குகிடையாது.

ஒரு பையைக் கையில் எடுத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றேன். அங்கு சிறிது தூரம் சுற்றித்திரிந்து சில சல்லிக் கற்களைப் பையில் எடுத்துப் போட்டுக்கொண்டு வந்தேன்.

இவைகளையெல்லாம் பயன்படுத்தி பனை மரத்தடியில் முருகன் அமர்ந்திருந்த இடத்தில் ஓர் மேடை அமைத்தேன். அதில் நான் கொண்டுவந்த கல்லையும் நிறுவினேன். பார்த்தேன். பனைமரத்தடிப் பிள்ளையார் போன்று அழகாகவே இருந்தது.

அபிஷேகம், பூசை, அர்ச்சனை, தீபாராதனை, மந்திர உச்சாடனம் எல்லாம் செய்து முருகனை வழிபட்டுவிட்டு வந்துவிட்டேன். அன்று முதல் அது ஓர் வழிபாட்டிடமாகவே இருந்து வந்தது.

இதுநடந்து சுமார் ஒருவருடமிருக்கலாம். கவியோகி சுவாமி சுத்தானந்த பாரதியார் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார். அப்போது அதே இடத்தில் ஓலைக் கொட்டிலில் கோவிலும் கட்டி, ஓர் வேலும் செய்தெடுத்தோம்.

பாரதியாருடன், வேலையும் ஊர்வலமாக மேளவாத்தியத்துடனும், கூட்டுப் பிரார்த்தனையுடனும் கொண்டுவந்தோம். பாரதியார் யாக பூசைகளெல்லாம் செய்து, வேலையும் அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார்கள்.

அன்றுமுதல் இக்கோவில் “ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயம்” என்று அழைக்கப்பட்டு வருகிறது.

சில ஆண்டுகளின் பின்பு இந்தியாவிலிருந்து வருகை தந்த ஒரு சிற்பாசிரியையைக்கொண்டு திருச்செந்தூர் முருகனுக்கு ஓர் சிலையும் செய்து பிரதிஷ்டை செய்தோம்.

கடந்த சூறாவளியின்போது (23-11-1978) கோவில் எல்லாமே விழுந்து தரைமட்டமாகிவிட்டது. சில மாதங்கள் கடந்தபின்பு மீண்டும் ஓலைக்கொட்டிலைக் கட்டிவிட்டோம்.

1980ம் ஆண்டு ஒக்டோபர் 23ந் திகதி அடிக்கல் நாட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. கட்டிடப் பகுதியில் பிரதம பொறியலாளராகக் கடமையாற்றிய திரு. S. சுப்பிரமணியம் அவர்கள் இவ்விழா சிறப்பாக நடைபெறுவதற்குப் பெரிதும் உதவினார்கள்.

பட்டிருப்பு பா.ம. பிரதிநிதி கணேசலிங்கம், பொலிஸ் அதிபராகக் கடமையாற்றிய திரு. அம்பிகாபதி இன்னும் பல பிரமுகர்களும் விழாவில் கலந்துகொண்டனர். அன்றே ஒரு திருப்பணிச் சபையும் அமைக்கப்பட்டது.

ஆலய கட்டுமானப் பணிகள்

இப்போது துவிதள விமானத்தைக் கொண்ட கற்பக்கிருகம், அர்த்தமண்டபம், மஹாமண்டபம், நிர்த்தமண்டபம், தம்பமண்டபம் எல்லாம் கட்டி முடிந்துவிட்டன. கோவில் புதுப்பொலிவுபெற்றுள்ளது.

05-02-1984ல் மஹா கும்பாபிஷேகமும் ஒழுங்குகளும் நடைபெற்றுவருகின்றன. தமிழ்நாடு, கோயம்புத்தூர் ஜில்லாவிலுள்ள சிரவை ஆதீனம் கெளமார மடத் தலைவர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

கண்திறந்த சம்பவம்

ஆலய முகப்பில் திருச்செந்தூர் முருகனின் திருவுருவமும், கோவில் தோற்றமும் வரையப்பட்டுள்ளது. ஓவியர் செல்வம் என்பவர் இந்த ஓவியத்தை வரைந்தார்.

28-06-83ல் இவர் ஓவிய வேலைகளையெல்லாம் முடித்து, கண் திறப்பதை மட்டும் முடிக்காமல் பகல் உணவுக்காக வெளியில் சென்றிருந்தார். பின்பு அவர் திரும்பிவந்து பார்த்தபோது கண்கள் தானாகவே திறபட்டிருந்தன.

இச்சம்பவம் 28-06-83 பகல் 12.00 மணிக்கும் 1.00 மணிக்கும் இடையில் நடந்தது. கண்களைத் திறந்தவர் யாரோ தெரியவில்லை. திறந்ததைக் கண்டவர்களுமில்லை. அதுவும் முருகப் பெருமானின் திருவருளேயாகும்.

திருச்செந்தூர் முருகன் திருவுருவம்

சுவாமி அவர்களின் எண்ணக்கரு

இந்துமதத் துறவிகளே ஆலயத்தில் பூசை செய்யவேண்டும். ஆலயத்தைப் பரிபாலிக்க வேண்டும். சாதிபேதமின்றி எல்லாரும் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை நேர்முகதரிசனம் செய்யவேண்டும்.

முடியுமானவரை கோவில் பூசை, அர்ச்சனை காரியங்களெல்லாம் தமிழிலேயே நடைபெறவேண்டும். ஆலயம் மக்களின் ஆத்மிக அறிவை வளர்க்கக்கூடிய நிலையமாக விளங்கவேண்டும்.

இங்கு ஓர் நிலையம் அமைத்து தமிழில் கோவில்களில் பூசை, அர்ச்சனை காரியங்கள் செய்யக்கூடியவாறு இளைஞர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்.

இப்பெரும் பணிக்கு இந்துமத அபிவிருத்தி அமைச்சினதும், ஏனைய ஆலய நிர்வாகிகளினதும், இளைஞர்களினதும், மக்களதும் உதவியையும் ஒத்துழைப்பையும் சுவாமி ஜி நாடிநின்றார்.

அன்றும் இன்றும் எல்லோரும் ஏன் மேற்குப் பக்கம் வாசல் வைத்துக் கோவில் கட்டுகிறீர்களென்று கேட்கிறார்கள். முருகன் மக்கள் வாழும் திசையை நோக்கி இருந்து மக்களுக்கு அருள்புரியவேண்டும். முருகனின் கண்பார்வை மக்கள் மீது செறிய வேண்டும் என்பதே எனது நோக்கம்.

இதை முருகனும் ஏற்றுக்கொள்ளுகின்ற வகையில்தான் கண்களும் தானாகவே திறந்திருக்கின்றன என எண்ணுகிறேன். அதுமட்டுமல்ல கடவுள் இல்லாத திசையைக் கண்டுபிடிக்கமுடியுமா? என்றார் சுவாமி ஜி.

இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்க வேண்டுமானால், மக்களை அழிவுப்பாதையினின்றும் திருப்ப வேண்டுமானால் சமய அறிவை மக்களிடையே வளர்க்க வேண்டும்.

சமயங்களின் மத்திய நிலையங்களாகிய ஆலயங்களில் நடைபெறும் பிழைகளைத் திருத்தவேண்டும். ஆலயங்களைச் சமயஅறிவை மக்களுக்கு ஊட்டக்கூடிய நிலையங்களாக மாற்றி அமைக்கவேண்டும். நான் கொள்கைக்காகவே கோவில் கட்டியுள்ளேன் என்றார் சுவாமி ஜி.

இவ்வாலயம், மக்களுக்கு ஓர் முன்மாதிரியாக விளங்கும். இதை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டால் தங்கள் ஊர்களிலுமுள்ள ஆலயங்களின் நடைமுறைகளை அப்படிமாற்றிக் கொள்ளலாம் என்றார் சுவாமி ஜி.

தலவரலாறு – இரண்டாவது பாகம்

முதலாம் பாகத்தில் குறிப்பிடப்பட்டவாறு ஆலயத்தில் சகலகருமங்களும் செவ்வனே நிகழ்ந்து கொண்டிருந்தபோது 1997ம் ஆண்டு காலப்பகுதியில் சுவாமி அவர்கள் தனித்து ஆலய நிருவாகத்தை நடத்திக்கொண்டிருந்த காரணத்தினால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.

அதனால் ஆலயத்தைப் பரிபாலிப்பதற்காக நிருவாக சபையொன்று தெரிவுசெய்யப்பட்டது. பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பொறுப்பு சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களால் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. முருகப்பெருமானின் திருவருளால் பிரச்சினைகள் படிப்படியாகத் தீர்ந்து போயின.

அதன்பின்னர் பிரச்சினைகளுக்குள்ளாயிருந்த ஆலய கிரியைகள் நடவடிக்கைகள் என்பன கிரமமாக இடம்பெற்றுவந்தன.

இவ்வாறிருக்கும் வேளையில் இரண்டாயிரமாம் ஆண்டு முற்பகுதியில் எம்பெருமான் உலாவருவதற்குச் சித்திரச் சிற்பத் தேர் ஒன்றை அமைக்க வேண்டுமென்ற எண்ணம் சுவாமி ஜி அவர்களுக்குத் தோன்றிற்று.

அவர் எண்ணப்படி தேர் கட்டும் பணி சிறப்பாக நிறைவேறி 04-09-2002 அன்று வெள்ளோட்டமும் 05-09-2002 அன்று தேர் பவனியும் இடம்பெற்றன.

சித்திரச் சிற்பத் தேர்

மட்டக்களப்பில் முதன்முதலாகச் சித்திரச் சிற்பத் தேர் ஒன்றை அமைத்த பெருமைக்கு சுவாமி அவர்கள் பாத்திரமானார்கள்.

இவ்வாறு சிறப்பாகப் பூசை வழிபாடுகள், சமூகப் பணிகள் நிறைவேற்றிக் கொண்டிருந்தவேளையில் சுவாமியின் உடல்நிலை தளர்வடையலாயிற்று.

அதன்காரணமாக அவர் ஆலயப் பொறுப்புக்களை அவரது சீடர்களிடம் ஒப்படைத்ததோடு மேற்பார்வைப் பொறுப்பை நிருவாகத்தினரிடம் ஒப்படைத்தார்.

அவருடைய உடல்நிலை சீரடையாததன் நிமித்தம் 2004-11-20ந் திகதி சனிக்கிழமையன்று சுவாமி அவர்கள் சமாதிநிலையை அடைந்தார்.

சமாதிநிலையடைந்த அவரது தேகத்தைப் பக்தர்கள் முன்பிருந்த ஆலயத்தின் பின்புறமாகக் கடற்கரை அருகில் கிழக்குநோக்கி இருத்தினர். அதற்காகச் சமாதி ஆலயம் ஒன்றைநிறுவி ஓங்காரேஸ்வரர் ஆலயம் எனநாமம் சூட்டினர்.

தலவரலாறு – மூன்றாவது பாகம்

சுவாமி அவர்கள் சமாதி அடைந்ததன் பின்னர் 26-12-2004ல் ஆசியா எங்கனுமே கடற்கோள் அனர்த்தம் ஏற்பட்டது எல்லோரும் அறிந்த விடயமாகும்.

இக்கடற்கோள் அனர்த்தத்தினால் எமது ஆலயமும் பெரும் பாதிப்புக்குள்ளானது. ஆலயத்தின் பிரதமகுருவும் அவரது சகோதரரும் மற்றுமொரு சீடரும் ஆலய ஆச்சிரமத்தில் தங்கியிருந்தனர்.

2004 கடற்கோள் அனர்த்தத்திற்குப் பின்னர்

அவர்கள் உயிர் தப்புவதற்காகக் கர்ப்பக் கிருகத்தினுள் ஏறிநின்றனர். அவ்வாறு ஏறி நின்றபோது மூச்செடுக்க முடியாத காற்றோட்டமற்ற சூழல் நிலவியதனால் அவஸ்தைக்கு உள்ளாயினர்.

அதிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் விதமாக ஆலயம் இரண்டாகப் பிளந்தது. இதையும் ஒரு தெய்வ அதிசயம் என்றே கொள்ளவேண்டும்.

இது இவ்வாறிருக்க தேர்ச்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 2002ல் வெள்ளோட்டம் கண்ட தேர், தேர்ச்சாலையின் கதவை வெள்ளம் திறக்கத் தானே புறப்பட்டு எதிரிலிருந்த மதிலை உடைத்துக்கொண்டு பாதையின் மறுகரையிலிருந்த பக்தர் ஒருவரின் வீட்டு வளவிலிருந்த செவ்விளநீர் மரத்தோடு நின்றது.

தேர்புறப்பட்டதும் தேர்ச்சாலை தரைமட்டமாகியது. இதைக்கண்ணுற்ற அனைவரும் இது ஓர் அற்புதம் என்றார்கள்.

கோவில் சேதமடைந்தாலும் தாமதமெதுவுமின்றிச் சிதைந்த கோயிலிலே சுவாமி விக்கிரகங்கள் அனைத்தும் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு எம்பெருமானுக்குரிய பூசைகள் அனைத்தும் முறைப்படி நடந்தன.

எனினும் ஆலயம் புதிதாகக் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் காணும்வரை மஹோற்சவம், தீர்த்தம் என்பன இடம்பெறவில்லை.

புதிய ஆலய கட்டுமானம்

சுவாமி ஜி கொடுத்துவைத்திருந்த பணத்தில் கிடைத்த தொகையையும், பக்தர்களிடமிருந்து திரட்டிய நிதியையும் கொண்டு ஆலயத்தின் புதியகட்டடப் பணி 28-06-2006ல் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனைச் சேர்ந்த ஸ்ரீமத் சுவாமி அஜராத்மானந்த மஹராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற அடிக்கல் நடும் வைபவத்துடன் ஆரம்பமாகியது.

116 அடி நீளமும் 22 அடி அகலமும் கொண்ட ஆலயக் கட்டடத்தின் ஆலயக் கர்ப்பகிருகத்திற்கான அத்திவாரம் 18 அடி ஆழத்திலும் மண்டபங்களுக்கான அத்திவாரம் 12 அடி ஆழத்திலும் இடப்பட்டது.

கட்டடப் பணி மெதுவாக நடந்து துவிதள விமானத்தைக் கொண்ட கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம், மஹாமண்டபம் என்பன பூரணமாகக் கட்டப்பட்டு வர்ணம் பூசப்பட்ட நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்த சுவாமி வேதாந்தானந்தா அவர்களின் வழிகாட்டலில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வர சர்மா அவர்களால் புதிய கோவிலின் கும்பாபிஷேகம் 23-06-2010 அன்று சிறப்பாக நடத்திவைக்கப்பட்டது.

2010 புதிய ஆலய மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் 47 நாட்களுக்கு நடத்தப்பட்டு 48ம் நாள் சங்காபிஷேகமானது ஆலயப் பிரதமகுருவினால் 10-08-2010 அன்று சிறப்புற நடத்திவைக்கப்பட்டது.

சுவாமி ஜி அவர்களது காலப்பகுதியில் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதபூசைகள் சிறப்பாக நடைபெற்றதெனினும் சூரசம்ஹார நிகழ்வு இடம்பெறவில்லை.

இக்குறையும் 2018ம் ஆண்டு இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வுடன் தீர்த்துவைக்கப்பட்டது. சூரசம்ஹாரத்துக்கான அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்வு 2022ம் ஆண்டுமுதல் கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெறுவதற்கு பெருமானின் அருள் கைகூடியுள்ளது.

சூரசம்ஹார நிகழ்வு

புதிய ஆலயத்தின் இரண்டாவது கும்பாபிஷேகத்தை 20-06-2024 வியாழக்கிழமை நடாத்தும் பொருட்டு 24-03-2024 அன்று பாலஸ்தாபன நிகழ்வு இடம்பெற்றது.

பாலஸ்தாபனம் இடம்பெற்று கும்பாபிஷேகம் இடம்பெறும்வரை கும்பாபிஷேகத்துக்காக ஆலயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனருத்தாபன வேலைகள் உட்பட ஏனைய பூர்வாங்க நடவடிக்கைகள் அனைத்தையும் ஆலய நிருவாக சபையினர், தொண்டர்கள், இளந்தொண்டர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து அனைவரது ஒத்துழைப்புடன் நிறைவேற்றி மஹா கும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடத்திய பெருமைக்குரியவர் ஆலயப் பிரதமகுரு பிர. சபரீஷ சைதன்யர் என்றால் மிகையாகாது.

2024 மகா கும்பாபிஷேகம்

இக்கும்பாபிஷேகமானது அகில பாரதீய சந்நியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளரும் பொள்ளாச்சி தத்துவஞானசபையின் ஆச்சாரியருமாகிய சுவாமி வேதாந்த ஆனந்தா அவர்களது ஒழுங்கமைப்புக்கு அமைவாக திருக்கைலாய பரம்பரை மெயக்ணடார் சந்தானம் பேரூராதீனம் 25வது குருமகா சன்னிதானம் கைலைப் புனிதர் முதுமுனைவர் சீர் வளர் சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் மதுரை தெய்வநெறிக் கழகத் தலைவர் பூஜ்ய ஸ்ரீ சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி, பிரம்மச்சாரிகளான சிதானந்த சைதன்யா, கிருஷ்ணானந்த சைதன்யா, மற்றும் இலங்கை இராமகிருஷ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த மஹராஜ், ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த மஹராஜ், ஸ்ரீமத் பரசமய கோளறிநாத ஆதீனம், 39வது குருமகா சன்னிதானம் ஸ்ரீமத் சுவாமி புத்தாத்மானந்த சரஸ்வதி, தவத்திரு திருப்பாதசுவாமிகள், தவத்திரு நிர்மலானந்த சுவாமிகள், சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள், சின்மயா மிஷனைச் சேர்ந்த பிரம்மச்சாரி கார்த்திக் சைதன்யா, பிரமச்சாரிணி தன்வி சைதன்யா மற்றும் சுவாமி கைவல்யானந்த சரஸ்வதி, தவத்திரு ஜோதிர்மயானந்தா ஆகியோர் முன்னிலையில் மிகச்சிறப்பாக நிறைவேறியதுடன் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் 21-06-2024 முதல் நடைபெற்று 48ம் நாளான 07-08-2024 அன்று சங்காபிஷேகம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.